முனைவர் சீனிவாசன் ராமசாமி
முனைவர் சீனிவாசன் ராமசாமி அவர்கள் தமிழகத்தில் சேலம் மாவட்டம், இளம்பிள்ளையைப் பூர்வீகமாகக் கொண்டவர். கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 21 ஆண்டுகளாகத் தைவானைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும், “உலகக் காய்கறி மையம்” (www.avrdc.org) என்ற சர்வதேச வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தில் முதன்மை விஞ்ஞானியாகப் பணியாற்றி வருபவர். தற்போது அந்நிறுவனத்தின் ஆராய்ச்சி மேலாண்மைக் குழுவின் தலைவர் பொறுப்பில் இருக்கின்றார். பணியின் பொருட்டு உலகின் ஐந்து கண்டங்களில், நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், இவரது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்காக பல உலகளாவிய விருதுகளைப் பெற்றுள்ளார். சற்றொப்ப 225 ஆராய்ச்சிக் கட்டுரைகளை, சர்வதேச அறிவியல் சஞ்சிகைகளில் வெளியிட்டுள்ளார். உலகெங்கிலும் உள்ள 75 மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு ஆய்வு வழிகாட்டியாக இருந்திருக்கின்றார்.
பணியின் பொருட்டு அயராது உலகம் முழுவதும் சுற்றிவருகின்ற போதிலும், தமிழின் மீது கொண்ட தீராத காதலால் எழுத்து மற்றும் பேச்சு என்று இலக்கிய மற்றும் அறிவியல் தமிழ் உலகிலும் பயணிக்கின்றார். தைவான் தமிழ்ச்சங்கத்திற்கு நல்லதொரு ஆலோசகராகவும், வழிகாட்டியாகவும் இருந்து வருகின்றார். அத்தமிழ்ச் சங்கத்திற்காக பட்டிமன்றம், மேடைப்பேச்சு பயிற்சிப் பட்டறை ஆகியவற்றை நடத்திக் கொடுத்திருக்கின்றார். வி.ஜி.பி. உலகத் தமிழ்ச்சங்கமும், தைவான் தமிழ்ச்சங்கமும் இணைந்து தைவானில் திருவள்ளுவர் சிலையை நிறுவிய நிகழ்வில், கவியரங்கம், பட்டிமன்றம் மற்றும் அப்போது வெளியிடப்பட்ட புத்தகத்தில் கட்டுரை வழங்கியமைக்காக வி.ஜி.பி. உலகத் தமிழ்ச்சங்கத்தின் விருது பெற்றவர்.
திண்ணை மற்றும் பதிவுகள் போன்ற இணைய இதழ்களிலும், பசுமை விகடன் மற்றும் தன்னம்பிக்கை ஆகிய இருவார மற்றும் மாத இதழ்களிலும் எழுதியும், எழுதிக்கொண்டும் இருப்பவர். பசுமை விகடனில் இவர் எழுதிய ‘சிறிய நுட்பம், பெரிய லாபம்’ என்ற தொடர் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதாகும். பேராசிரியர் இல. செ. கந்தசாமி அவர்கள் நிறுவி, இன்றளவும் வெளியாகிக் கொண்டிருக்கும் ‘தன்னம்பிக்கை’ மாத இதழில் தொடர்ந்து ‘வெற்றி பெற்ற மனிதரெல்லாம்’ என்ற பெருந்தலைப்பின் கீழ், பல்வேறு கதைகளைக் கடந்த நான்கு ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கின்றார். அது மட்டுமன்றி, பூச்சிகளைப் பற்றிய நாம் அறியாத அரிய மற்றும் சுவாரசிய தகவல்களைத் தொகுத்து, விஞ்ஞானம் தெரியாத வெகுஜன மக்களுக்காக ‘ஆறுகால் அதிசயங்கள்’ என்ற புத்தகத்தை 2022 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.