இலக்கியம், அறிவியல், பண்டைய வரலாறு, தொல்லியல் என்று உலகின் தமிழர்கள் மற்றும் பல்வேறு தொல்குடிகளைப் பற்றிய தகவல்கள் மற்றும் கட்டுரைகள்

முனைவர் சீனிவாசன் ராமசாமி (தைவான்) கிட்டத்தட்ட ஒரு தலைமுறைக்கு முன்னர் நான் செவிவழிச் செய்தியாக கேள்வியுற்ற இலக்கிய நயம் மிகுந்த ஒரு நிகழ்வே இக்கட்டுரை. அந்நாளில், பள்ளிச் சிறுவர்களாக இருந்த எங்களுக்குத் தமிழை இரசித்து, அதன் சுவையில் இலயித்து கற்பிப்பதில் தமிழாசிரியர்கள் மட்டுமன்றி மற்ற பாடத்து ஆசிரியர்களும் சிறந்து விளங்கினர். அப்படிப்பட்ட ஒருவர், எனது மதிப்பிற்குரிய திருவாளர். சுந்தரராஜன் அவர்கள்; இவர் சேலம் மாவட்டம் தாரமங்கலம் செங்குந்தர் மகாஜன பள்ளியில் அந்நாளில் ஆசிரியராகப் பணியாற்றியவர். அவருடைய ஒய்வு…

Written by

×

ஆசுகவியையும் அசைத்துப் பார்த்த சிறார்கள்…

முனைவர் சீனிவாசன் ராமசாமி (தைவான்)

கிட்டத்தட்ட ஒரு தலைமுறைக்கு முன்னர் நான் செவிவழிச் செய்தியாக கேள்வியுற்ற இலக்கிய நயம் மிகுந்த ஒரு நிகழ்வே இக்கட்டுரை. அந்நாளில், பள்ளிச் சிறுவர்களாக இருந்த எங்களுக்குத் தமிழை இரசித்து, அதன் சுவையில் இலயித்து கற்பிப்பதில் தமிழாசிரியர்கள் மட்டுமன்றி மற்ற பாடத்து ஆசிரியர்களும் சிறந்து விளங்கினர். அப்படிப்பட்ட ஒருவர், எனது மதிப்பிற்குரிய திருவாளர். சுந்தரராஜன் அவர்கள்; இவர் சேலம் மாவட்டம் தாரமங்கலம் செங்குந்தர் மகாஜன பள்ளியில் அந்நாளில் ஆசிரியராகப் பணியாற்றியவர். அவருடைய ஒய்வு நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் அவருடன் அளவளாவிக் கொண்டிருப்பது அடியேனுடைய வழக்கம். இலக்கணங்களைக் கூட தனக்கே உரிய பாணியில், எளிமையாகச் சொல்லித்தரக் கூடியவர், அவர். உதாரணத்திற்கு, “மோனைத் தொடர் என்றால் என்ன?” என்று கேட்டீர்களேயானால், செய்யுள்களில் இருந்து விளக்கம் தர மாட்டார். மாறாக, “சுப்பிரமணியன் சுழலில் சிக்கிய சுறாமீனைச் சுட்டு சுவைத்து சாப்பிட்டான்… இந்த தொடரில் எல்லா வார்த்தைகளும் ‘ச’கரத்தில் ஆரம்பிக்கின்றதல்லவா, அதுதான் மோனை!” என்று நடைமுறை வாழ்விலிருந்தே விளக்கி விடுவார். அவர்தான், ஒருநாள் சிலேடைப் புலவர் காளமேகத்தின் வாழ்வில் நடைபெற்ற ஒரு நிகழ்வை எனக்கு விவரித்தார். தனிப்பாடல் திரட்டில் இடம்பெற்றிருப்பதாகச் சொல்லப்படும் அந்நிகழ்வு பெரும்பாலானவர்களுக்குப் பரிச்சயமில்லாமல் போனதில் வியப்பில்லை; ஏனெனில் செய்யுளில் மனப்பாடப் பகுதியில் இல்லாத எதையும் நாங்கள் மனதில் மட்டுமல்ல, விழிகளில் விழுவதற்கும் கூட அனுமதியோம்!

அது சரி… அதென்ன சிலேடை? ஒரு சொல்லோ, சொற்றொடரோ பல பொருள்படும்படி சொல்லப்பட்டால் அதற்குச் சிலேடை என்று பொருள். திருவாளர் சுந்தரராஜனின் வார்த்தைகளில் உதாரணம் சொன்னோமானால், “சும்மா இருமாதே!”. இதற்கு, ‘தொடர்ந்து இருமிக் கொண்டிருக்காதே’ என்றும் பொருள் கொள்ளலாம்; ‘பணியெதுவும் செய்யாமல் இரு பெண்ணே’ என்றும் பொருள் கொள்ளலாம். ஆக, தொடர் ஒன்று – ஆனால் பொருள் இரண்டு. அதுதான் சிலேடை! தமிழ் இலக்கியங்களைப் புரட்டிப் பார்த்தோமானால், சிலேடைக் கவிகளைப் பாடியதில் முக்கியமானவர் காளமேகப் புலவர். பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவரது கவிகள் மட்டுமன்றி, வாழ்வும் சுவாரசியமானதுதான். குடந்தைக்கு அருகில் பிறந்த இவர், திருவரங்கத்து ஆலயத்தில் மடப்பள்ளியில் பணியாற்றினார் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் இவரது பெயரை ஒற்றி, மதுரை ஒத்தக்கடைக்கு அருகில் இருக்கும் திருமோகூர் ஆலயத்தில் (இவ்வாலயத்தில் இறைவனின் திருநாமம் காளமேகப் பெருமாள் என்பதைக் கவனிக்கவும்; இங்குள்ள சக்கரத்தாழ்வார் சந்நிதி பிரபலம். அந்நாளில், வயல்களின் நடுவில் அமையப்பெற்ற சிற்றூரில் இருக்கும் இவ்வாலயம் மனதிற்கும் ஆன்மாவிற்கும் இதம்) பணியாற்றிய ஒருவரின் மகன் என்று சொல்வோரும் உண்டு. ஆனால், காளமேகப் புலவரைப் பற்றி அதிமதுரக் கவிராயர் பாடிய,

“வாசவயல் நந்தி வரதா திசையனைத்தும்

வீசுகவி காள மேகமே…..”

என்ற பாடலில் இருந்து, காளமேகப் புலவரின் இயற்பெயர் வரதன் என்றும், திருவரங்கத்து ஆலயத்தில் பணியாற்றியவர் என்றுமே பெரும்பாலனவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. பிறப்பால் வைணவரான இவர், திருவானைக்கா ஆலயத்தில் நடனமாடும் மோகனாங்கி என்பவள் மீது காதல் கொண்டாராம். சைவத்திற்கும், வைணவத்திற்கும் அடிக்கடி சச்சரவுகள் ஏற்பட்டுக் கொண்டிருந்த அக்காலகட்டத்தில், தனது காதலுக்காக பிறந்த சமயத்தை விட்டு, சைவ சமயத்தைத் தழுவினாராம். சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னரே, காதலுக்காக மதம் மாறியிருக்கின்றார் நமது காளமேகம்!

கலைமகளின் திருவருளை நிரம்பப் பெற்ற காளமேகம், ஒரு கார்மேகம்… கவிமழை பொழிவதில் நிஜமழைக்கு நிகரானவர். நினைத்த மாத்திரத்தில் கவிதை பொழியக்கூடியவர் என்பதால், ஆசுகவி என்று அழைக்கப்பட்டவர். அப்படிப்பட்டவர் வசைபாடுவதிலும் வல்லவராம். மனிதர், கொஞ்சம் முன்கோபியாக இருந்திருப்பார் போலும்! அன்னாரின் படைப்புக்களில் சிலேடைக் கவிதைகளுக்கு என்று தனியிடம் உண்டு. அவரது சிலேடைக் கவிதைகளில், எனது நினைவில் இன்றளவும் நிழலாடும் வரிகள் (அந்நாளில் எமக்கு மனப்பாடப் பகுதியில் இச்செய்யுள் இருந்தது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்!),

“ஆடிக் குடத்தடையும் ஆடும்போதே இரையும்
மூடித்திறக்கின் முகம்காட்டும் – ஓடிமண்டை
பற்றிப் பரபரெனும் பாரிற் பிண்ணாக்குமுண்டாம்
உற்றிடுபாம் பெள்ளெனவே ஓது”  

என்பதாகும். இந்தப் பாடல் எள் மற்றும் பாம்பு இரண்டிற்கும் பொருந்துவதாகும். எப்படி என்று பார்ப்போமா?

எள்

ஆடிக் குடத்தடையும் – செக்கில் ஆட்டப்பட்டு நல்லெண்ணெய் ஆக குடத்தில் அடைபடும்

ஆடும்போதே இரையும் – செக்கில் ஆட்டப்படும்போது இரைச்சலைக் கொடுக்கும்

மூடித்திறக்கின் முகம்காட்டும் – குடத்தின் மூடியைத் திறந்தால் எண்ணெயில் நமது முகம் தெரியும்

ஓடிமண்டை பற்றிப் பரபரெனும் – நல்லெண்ணெயைத் தலையில் தேய்த்துக் கொண்டால், உடல்சூடு தணிகையில் பரபரவென குளிர்ச்சி தரும்

பாரிற் பிண்ணாக்குமுண்டாம் – எள்ளினைப் பிழிந்து எண்ணெயை எடுத்தவுடன் பிண்ணாக்கு உண்டாகும்

பாம்பு

ஆடிக் குடத்தடையும் – படமெடுத்து ஆடும் நாகம் மீண்டும் பாம்பாட்டியின் மூங்கில் குடத்திற்குள் அடைந்துவிடும்

ஆடும்போதே இரையும் – பாம்பாட்டியின் மகுடி வாசிப்பிற்கு ஏற்ப படமெடுத்து ஆடுகையில், புஸ் என்ற இரைச்சலைக் கொடுக்கும்

மூடித்திறக்கின் முகம்காட்டும் – பாம்பாட்டியின் மூங்கில் குடத்தின் மூடியைத் திறந்தால், பாம்பு தனது முகத்தினைக் காட்டும்

ஓடிமண்டை பற்றிப் பரபரெனும் – நாகம் தீண்டிவிட்டால், அதிவிரைவில் அதன் நஞ்சு தலைக்கேறும்

பாரிற் பிண்ணாக்குமுண்டாம் – இப்புவியில் பிளவுபட்ட நாக்கினைக் கொண்ட உயிரினம் பாம்பு

இப்படிப்பட்ட சிலேடைப் புலவரான, காளமேகப் புலவர், ஒருநாள் தன் நண்பரைக் காண்பதற்காக நாகப்பட்டினம் சென்றிருக்கின்றார். நல்ல மதியவேளை… புலவருக்கோ பெரும்பசி… எங்காவது சோறு விற்றால், வாங்கித் தின்னலாம்; ஆனால் விற்கும் இடம் தெரியவில்லை புலவருக்கு! சுற்றும் முற்றும் பார்க்கின்றார். அங்கே தெருவினில், சில இளம் சிறார்கள் பாக்குக் கொட்டைகளை வைத்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர் (நமது இளம்பிராயத்தில் கோலிக்குண்டுகளை வைத்து விளையாடுவோமே, அது போல இருக்கலாம் என்று அனுமானம் செய்து கொள்கின்றேன்). அவர்களிடம் சென்ற நமது புலவர், “குழந்தைகளே, சோறு எங்கு விக்கும்?” என்று கேட்டிருக்கின்றார். ‘விற்கும்’ என்ற தமிழ்ச்சொல்லை பேச்சு வழக்கில் ‘விக்கும்’ என்று சொல்கின்றோமல்லவா? விளையாட்டு மும்முரத்தில் இருந்த குழந்தைகளோ, கிஞ்சித்தும் யோசியாமல், “தொண்டையில் விக்கும்” என்று பதில் கூறியிருக்கின்றனர். ஏற்கனவே அசுரப்பசியில் இருக்கும் புலவருக்கோ தலைக்கேறியது கோபம்… இயல்பிலேயே வசைபாடுவதில் வல்லவர் வேறு! வெகுண்டெழுந்த புலவர், தன்னிடம் ஏளனமாய் பதிலுரைத்த சிறார்களை நோக்கி வசைபாடும் பொருட்டு, அங்கிருந்த சுவற்றில் அருகிலிருந்த கரித்துண்டைக் கொண்டு,

“பாக்குத் தறித்து விளையாடும் பாலகர்க்கு

நாக்கு …”

என்று எழுதினார். அடுத்த வார்த்தைகளைப் போட்டு பாடலை நிறைவு செய்யும் முன்னரே, பசியின் வீரியம் அதிகரித்திட, காளமேகப் புலவருக்கு மேற்கொண்டு எழுதும் அளவிற்குப் பொறுமை இருக்கவில்லை. எனவே முதல் வரியுடனேயே நிறுத்திவிட்டு, பசியாற சென்றுவிட்டார். அப்படிச் சென்றவர் உணவு விற்கும் இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து, பசியைப் போக்கிய பின்னர், சிறுவர்களை நோக்கி வசைபாடும் பொருட்டு தான் எழுத ஆரம்பித்து, ஆனால் பாதியிலேயே விட்டுச் சென்ற வரியினை, “நாக்குத் தெறித்து விழ நாகேசா” என்று முடிக்க விழைந்து திரும்பி வந்தார். வந்தவருக்கோ கடும் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியம்! ஏனெனில், அவர்தம் பாடல் முடிக்கப்பட்டிருந்தது. அதுவும் வசைபாடலாக அல்ல – வாழ்த்துப் பாடலாக!

“பாக்குத் தறித்து விளையாடும் பாலகர்க்கு

நாக்கு …”

என்றுதானே நம் காளமேகம் விட்டுச் சென்றிருந்தார். அடுத்த வரியோ,

“நாக்குத் தமிழ் செழிக்க நாகேசா”

என்று முடிக்கப்பட்டிருந்தது. இப்படித்தான் அந்நாளில் திருவாளர். சுந்தரராஜன் எமக்குச் சொல்லியிருந்தார். ஆனால், இப்போது அந்த நிகழ்வைத் தேடி இணையங்களில் மேய்ந்தபோது, இரண்டாவது வரி “நாக்குத் தமிழுரைக்கும் நன்னாகை” என்று இருப்பதாக தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இணையதளங்கள் குறிப்பிடுகின்றன. குறிப்பிட்ட இத்தனிப்பாடலை நான் புத்தகங்கள் எதிலும் பார்த்திராத / படித்திராத காரணத்தால், சரியான பாடல் வரிகள் எதுவென அறுதியிட்டுக் கூற முடியவில்லை. ஆனால், முதல்வரி அனைத்து இணைய தளங்களிலும் “பாக்குத் தறித்து விளையாடும் பாலகர்க்கு” என்று சரியாகவே உள்ளது. இரண்டாவது வரி மட்டுமே “நாக்குத் தமிழ் செழிக்க நாகேசா” என்றும், “நாக்குத் தமிழுரைக்கும் நன்னாகை” என்றும் மாறுபடுகின்றது. ஆனால், எது எப்படியாயினும், என்னதான் ஆசுகவியாக, சிலேடைப்புலவராக, வசைபாடுவதில் வல்லவராக இருந்தாலும், அவரையும் மடக்கிப் போடுவதில் அங்கே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் இருந்திருக்கின்றார்கள்.  வசைபாட விழைந்து எழுதப்பட்ட வரிகளோ, அறம்பாடப்பட்டு முடிக்கப்படுவது என்பது, சிறந்த இலக்கியவாதிகளால்தானே இயலும். அதுவும் இளம்சிறார்களே அவ்வாறு சிறந்து விளங்கியிருப்பது எப்படிப்பட்ட அதிசயம்? எனவே, அப்படிப்பட்ட புலமையைக் கண்டு காளமேகப் புலவர் வாயடைத்து விட்டார். வசைபாட எத்தனித்தவர் அங்கே எழுதப்பட்டிருந்த வாழ்த்தும் வரிகளில் உளம் குளிர்ந்து, அங்கிருந்து அகன்றுவிட்டார்.

பின்னூட்டமொன்றை இடுக