
‘மாரி’ என்ற சொல்லுக்கு மழை, மேகம், நீர், போன்ற பொருட்களுடன் ‘அம்மை நோய்’ என்ற பொருளும் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. ஒருவேளை கால்நடைகளைத் தாக்கும் ‘கோமாரி’ நோய் கூட இதன் அடிப்படையிலேயே இருத்தல் வேண்டும்.
குறுந்தொகையின் 66 ஆவது பாடலில் (பாடல் கீழே) வரும் ‘வம்ப மாரி’ என்ற வார்த்தை எனக்கு மிகவும் பிடித்தது.
மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை
கல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறிய
பருவம் வாரா வளவை நெரிதரத்
கொம்புசேர் கொடியிண ரூழ்ந்த
வம்ப மாரியைக் காரென மதித்தே.
அதாவது கார் காலத்தில் மழை பொழிவது இயற்கை. பெரும்பாலும் தொழிலின் நிமித்தம், மனைவியைப் பிரிந்து செல்லும் கணவன் கார்காலத்தில் வீட்டிற்குத் திரும்பி விடுவான். அப்படித்தான் திடீரென ஒருநாள் மழை பொழிகின்றது. தலைவியும் கார்காலம் வந்துவிட்டது, ஆனால் இன்னும் என் கணவன் வீடு திரும்பவில்லையே என்று நினைந்து வருந்துகின்றாள். அப்போது, அங்கு வரும் அவளது தோழி சொல்வதாக அமைந்துள்ளதே மேற்சொன்ன பாடல். அதன் பொருள் கீழே:
“பரற்கற்கள் நிறைந்த பாலைநிலத்தில், கடந்து செல்வதற்கு அரிய வழியைக் கடந்துசென்ற உனது காதலர், மீண்டும் வருவதாகச் சொல்லிச் சென்ற கார்காலத்து பருவம் வருவதற்குள், பருவம் அல்லாத கோடைக்காலத்தில் இந்த மழை பெய்கின்றது. அந்த மழையைக் கார்காலத்து மழை எனக் கருதி, பருத்த அடியுடன் விளங்கும் கொன்றை மரங்கள் சரம்சரமாகப் பூக்களைப் பூத்துள்ளன. அது அந்த மரங்களின் அறியாமை. அதனால் இதனைக் ‘கார்ப்பருவம்’ என்று மயங்கி வருந்தாதே நீ!” என்று தோழி தலைவியைத் தேற்றுகின்றாள்.
அதாவது கார்காலத்தில், மழை தொடர்ந்து தினந்தோறும் பெய்யும். ஆனால், கோடை மழையோ திடீரென ஒருநாள் பெய்யும். அப்புறம் பெய்யாது. இப்படி, காலம் அல்லாத காலத்தில் பெய்யும் மழை ‘வம்ப மாரி’ என்று குறிப்பிடப்பட்டது.
இப்போது மாரியம்மனுக்கு வருவோம். முதலில், இயற்கையின் ஆற்றலைக் கண்டு அஞ்சிய மனிதன் அதன் சீற்றத்திற்கு ஆளாகாமல் இருக்க எண்ணியே இயற்கையை வழிபட முனைந்தான். அதன் அடிப்படையில்தான் இயற்கை வழிபாடுகளும், திருவிழாக்களும் உருவாகின. காலப் போக்கில் மனிதன், இயற்கைக்கு உருவம் கொடுத்து வழிபட ஆரம்பித்தான். ஆக, இயற்கை வழிபாட்டில் ஆரம்பித்த மனிதன், பின்னர் சிறுதெய்வ வழிபாட்டிற்கு மாறினான். பின்னர் அதுவே பெருந்தெய்வ வழிபாட்டிற்கும் அடிகோலியது. இவ்விரு வழிபாடுகளிலும் இயற்கையோடு இயைந்த அறிவியல் கூறுகள் உள்ளடங்கி இருக்கின்றன.

உதாரணத்திற்கு மாரியம்மன் திருவிழாக்களை எடுத்துக்கொள்வோம். சிறுதெய்வ வழிபாடாக ஆரம்பித்த மாரியம்மன் வழிபாடு, அச்சத்தின் காரணமாகவும், வளமைக்காகவும், இயற்கையின் சீற்றம் தணியவும், அம்மை, காலரா போன்ற பெருந்தொற்று நோய்கள் வராமல் தடுக்கவும் கொண்டாடப்பட்டன என்று திருப்பதி என்ற முனைவர் பட்ட ஆய்வு மாணவர் 2018 ஆம் ஆண்டு சான்லாக்ஸ் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழில் வெளியிட்ட கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘மாரி’ என்றால் மழை என்றும், ‘அம்’ என்றால் நீர் என்றும், ‘அன்’ என்றால் இன்மை என்றும் விளக்குகின்றார். எனவே, மழை இல்லாமல், பூமியில் நீர் குறைந்து காணப்படும் கோடைகாலத்தில் மேகமாக இருக்கும் மழைநீர் இம்மையாம் இந்த பூமிக்கு வரவேண்டி நடத்துவதே மாரியம்மன் திருவிழாக்கள். பொதுவாக மாரியம்மன் திருவிழாக்கள், வசந்த காலத்திற்கும் (Spring), இலையுதிர் காலத்திற்கும் (Autumn) இடைப்பட்ட கோடைக்காலத்தில் கொண்டாடப்படும். இந்த கோடைக்காலம் இளவேனில் காலமான சித்திரை மற்றும் வைகாசியில் தொடங்கி, முதுவேனில் காலமான ஆனி மற்றும் ஆடி மாதங்கள் வரை நீடிக்கும். இந்த மாதங்களில் நீடிக்கும் அதிக வெயிலினால், விவசாயத்திற்கும் மக்களுக்கும் நீர் பற்றாக்குறை ஏற்படுகின்றது. அது மட்டுமன்றி, கோடை வெப்பத்தின் தாக்கத்தால் அம்மை, காலரா போன்ற தொற்று நோய்களின் தாக்கமும் அந்த காலத்தில் அதிகமாக இருந்திருக்கின்றது. இவற்றிற்கு தீர்வு தரவேண்டிய மழையை வேண்டித்தான், மாரியம்மன் திருவிழாக்கள் இக்காலகட்டத்தில் நடத்தப்பட்டிருக்கின்றன.
இந்த திருவிழாக்களில் இடம்பெறும் முளைப்பாரிகளுக்குப் பின்னரும் ஓர் அறிவியல் உண்மை இருக்கின்றது. ஆடி மாதம் முடிந்து வருகின்ற மழைக்காலத்தில் விவசாயப் பணிகளும், நடவுகளும் இடம்பிடிக்கும். அதற்கான ஆயத்தமாக, எந்த பயிரினை அடுத்துப் பயிரிட இருக்கின்றோமோ, அந்தப் பயிரில் முளைப்பாரி எடுப்பார்கள். ஒருவேளை, நாம் இன்று விதைகளுக்குச் செய்யும் முளைப்புத்திறன் சோதனையாகக் (Germination test) கூட முளைப்பாரிகளைக் கருத இயலும்.
எனவே மாரியம்மனுக்கும் மழைக்கும் தொடர்பு இருப்பதைப் போலவே, மாரியம்மனுக்கும் நோய்களுக்கும் தொடர்பு இருக்கவே செய்கின்றது.

பின்னூட்டமொன்றை இடுக