பல்வேறு இதழ்களில் வெளியான எனது கவிதைகளின் தொகுப்பு
- இனிப்புக்குள் இருக்கும் உப்பு (பதிவுகள் இணைய இதழ், 04 டிசம்பர் 2014)
- மாட்டுப் பொங்கல் (பதிவுகள் இணைய இதழ், 15 ஜனவரி 2015)
- அன்றிலும் மகன்றிலும் (பதிவுகள் இணைய இதழ், 07 மே 2015)
- அத்தை ஆகிய சித்தப்பா (பதிவுகள் இணைய இதழ், 02 நவம்பர் 2015)
- எரிமலைப் பொங்கல் (திண்ணை இணைய இதழ், 04 ஜனவரி 2003)
வித்திடுவோம் இத்தமிழ்ப்புத்தாண்டில்!
தமிழ் எந்தன் உயிர் – என்று
தலை உயர்த்தி சொன்ன
தமிழ்க்குடியின்
இளைய தலைமுறையின் பெயரிலும்
இற்றை நாளில்
இல்லை தமிழ்!
எம்குல மாணவர்களில்
எத்தனை பேருக்கு
எட்டுத்தொகையும்
பத்துப்பாட்டும்
பதினெண் கீழ்க்கணக்கும்
செவிவழிச் செய்தியாயேனும்
எட்டியது என்று
எமக்குத் தெரிகிலை!
முற்றோதிய தமிழ்ச் சமூகத்தில் – நன்கு
கற்றோதிய மாந்தர்கள் கூடிடும் வேளையிலும்
அவர்தம் நாவினில்
நற்றமிழ் நர்த்தனம்
நரிக்கொம்பே!
அம்மியும் குழவியும்
அருகிவிட்டதைக் கூட
பொறுத்திடலாம் – ஆனாலும்
அம்மா என்றழைத்திட்ட குழவிகள்
அருகியதை -இந்நெஞ்சு
பொறுக்குதிலையே!
அந்நிய மொழியாம்
ஆங்கில இலக்கணத்தில்
அடிசறுக்கும் கணங்களில்
அவமானப்படுத்தும் நம்மவர்கள்
‘ஒரு ஊரில்’ என்று
‘கதை’க்கின்ற கயமையை
என்னென்று சொல்வேன்?
கால ஓட்டத்தில்
இம்மண்ணிலும் தமிழ் அருகியது – திரைப்
பண்ணிலும் தமிழ் அருகியது!
எம் மக்காள் – நீவீர்
தமிழ் இலக்கணத்தில்
வினைமுற்றும்
வினையெச்சமும்
மறந்திருக்கலாம் – ஆனால்
தமிழ் மறந்த – நம்
வினையின் எச்சமும்
வினையின் முற்றும்
சற்றும் சிந்தித்திலோம்!
தமிழ் –
ஒரு மொழியோடன்றி
தமிழ் – ஒரு நிலம்!
தமிழ் – ஓரினம்!
தமிழ் – ஓர் அடையாளம்!
தமிழ் – ஒரு கலாச்சாரம்!
அச் சாரம்
அவனி உள்ளவரையில்
ஆழப்பதிந்திருக்க
இத்தமிழ்ப் புத்தாண்டில்
வித்திடுவோம் – ஓர் அச்சாரம்!